கண்ணா ஜெயிச்சுட்டே!
காலை, 10:00 மணி - ஊர் பிரமுகர்கள் சிலருடன், ஏதோ காரியமாய் போய்க்
கொண்டிருந்தார் தலைவர் பழனி.அப்போது, எதிரில் வந்த கார் ஒன்று, அவர்களை
பார்த்ததும், ஓரங்கட்டி நின்றது.அதிலிருந்து இறங்கிய இளைஞனை, 'யாரு...'
என்பது போல் பார்த்தார், பழனி.அந்த இளைஞன், ''நான், வேலுச்சாமி மகன்
கண்ணன்,'' என்றதும், பழனி உட்பட, உடன் இருந்தோரும், 'ஆஹா...' என்று
ஆச்சர்யப்பட, அடுத்த நொடி பழனிக்கு ஆச்சரியம் போய், ஏமாற்றமும், குற்ற
உணர்வும் எழுந்தது.''அப்புறம் என்னை வந்து பார்,'' என்று, சொல்லி, நடையை
தொடர்ந்தவருக்கு, மனதில், பழைய சம்பவம் விரிந்து, ஊசலாடியது.ஊர் தலைவரான
பழனி, அந்த ஊரிலேயே வசதி படைத்தவராகவும் இருந்தார். ஊர் மக்கள், அவரிடம்
ஏதாவது கோரிக்கை வைக்க வேண்டும் என்றால் கூட, அவருடைய வலது கையான, மாரிசாமி
மூலம், பக்குவமாய் தெரிவிப்பரே தவிர, நேருக்கு நேர் நின்று பேச
மாட்டார்கள்; அவ்வளவு மரியாதை.பழனியின் பண்ணையில் வேலை செய்யும்,
வேலுச்சாமி மகனான கண்ணன், அப்போது, எட்டாவது படித்துக் கொண்டிருந்தான்.
பள்ளி நேரம் போக, அவர் வீட்டில், எடுபிடி வேலை செய்வது வழக்கம்.ஒரு சமயம்,
பழனி வீட்டில் நடந்த விசேஷத்திற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து
முக்கிய புள்ளிகள், தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர்.அவர்களுக்கெல்லாம்,
விருந்து பரிமாறும் போது, எப்படியோ உள்ளே நுழைந்து, பந்தியில் உட்கார்ந்து
விட்டான், கண்ணன். வெள்ளையும், சொள்ளையுமாய் பெரிய மனிதர்கள்
உட்கார்ந்திருந்த இடத்தில், திருஷ்டி பொட்டு போல், பழைய உடையுடன், அவன்
அமர்ந்ததைப் பார்த்தும், சகிக்கமுடியாமல், மாரிசாமியிடம் அவனை எழுந்து
போகச் சொல்லும்படி கூறினார், பழனி.அவன், கண்ணனை எழுந்திருக்க சொன்ன போது,
மறுத்து, 'என் பிரண்ட்சுங்க எல்லாம் பந்தியில் உட்கார்ந்திருக்காங்க; என்னை
மட்டும், ஏன் எழுந்திருக்க சொல்றிங்க...' என்றான்.'அவங்க, உன்னோடு பழகினா,
அவங்களும், நீயும் ஒண்ணாயிடுமா... அவங்க, எப்படி உடுத்தியிக்காங்க; நீ
எப்படி இருக்கன்னு பாரு...' என்று சொல்லி, 'பந்தி முடிஞ்சதும்,
மீதியிருந்தால், கூப்பிட்டு கொடுப்போம்; இடத்தை காலி செய்...' என்றார்,
மாரிச்சாமி.ஆனாலும், கண்ணன் எழுந்திருக்கவில்லை. இதனால், அங்கிருந்த பெரிய
மனிதர்கள், முகம் சுளித்தனர். இதைப் பார்த்து எரிச்சலுற்ற பழனி, 'என்னடா...
அவன் கிட்ட மத்தியஸ்தம்; இழுத்து, வெளியில தள்ளு...' என்றார்.அடுத்த நொடி,
அவன் வெளியேற்றப்படவே, கோபத்திலும், அவமானத்திலும் முகம் சிவந்து போன
கண்ணன், நடுத்தெருவில் நின்று, 'நீங்க எல்லாம் ஒரு பெரிய மனுஷனா...
பசியோடு, சாப்பிட உட்கார்ந்தவனை, சின்னப்பையன்னு கூட பாக்காம, இழுத்து
போடறிங்களே... உங்க பையன்னா, இப்படி செய்வீங்களா... 'எங்கிட்ட,
பணமில்லேன்னு தானே இப்படி செய்றீங்க; எவ்வளவு நாளைக்கு, இந்த பணமும்,
பவிசும்; நானும், ஒரு நாளைக்கு சம்பாதிக்காமலா போவேன்...' என்று அழுகையும்,
ஆவேசமுமாக பேசியதில், பரபரப்பு ஏற்பட்டு, 'தலைவரே... பொடிப்பயலோடு எதுக்கு
பிரச்னை... பேசாம, சாப்பிட்டுட்டு போகட்டும் விடுங்க. அவன் பசி, அவனை
அப்படி பேச வைக்குது; அதோடு, பிரண்ட்ஸ்ங்க எதிரில், அவமானப்படுத்தப்படுவதை,
யாராலும் தாங்க முடியாது...' என்று, வந்தவர்கள் சிபாரிசு செய்தனர்.அதனால்,
'சாப்பிடட்டும்...' என்று, அனுமதித்த போது, மறுத்து, 'எனக்கொன்னும் மான,
ரோஷம் இல்லாம போகல... இப்ப சொல்றேன்... உங்கள காட்டிலும், ஒரு ரூபாயையாவது
அதிகமா சம்பாதிச்சு பிறகு தான், உங்க வாசப்படியில கால் வைப்பேன்; அப்பவும்,
நீங்க வந்து கூப்பிட்டால் மட்டும்...' என்று, முறுக்கி கொண்டு
போனான்.அவனுடைய அப்பா, அம்மா வந்து காலில் விழுந்து, 'அவனை வெட்டிப்
போட்டிருக்கலாமே... நாலு பேர் மத்தியில், உங்கள கை நீட்டி பேசிட்டானாமே...
மன்னிச்சுருங்க சாமி... இருந்திருந்து எங்க வயித்துல, இப்படி ஒரு தறுதலை
வந்து பிறந்ததே...' என்று அரற்றினர்.அவர் சார்பில், 'இனி, அந்த பய, இந்த
ஊர்ல இருக்க கூடாது. ஐயாவை விட, அதிகமா, வசதியா வருவேன்னு சவால் போடறான்.
அப்படி ஒருநாள் வந்ததுன்னா, கிழக்கே உதிக்கிற சூரியன், மேற்கே
உதிச்சுதுன்னா, குதிரைக்கு கொம்பு முளைச்சுதுன்னா, அன்னைக்கு, இந்த ஊர்ல
கால் வைக்கட்டும்...' என்று சொன்னான் மாரிச்சாமி.அன்றே, தொலைவில் இருந்த
பாட்டி வீட்டுக்கு விரட்டப்பட்டான் கண்ணன்.அவன் ஊர் மாறி போனாலும், அவனை
பற்றிய தகவல்கள் வந்து கொண்டு தான் இருந்தது. அதன் அடிப்படையில், அவன்
நன்றாக படித்து, வேலை தேடி, சென்னைக்கு சென்றது, பின், அங்கிருந்து
சிங்கப்பூர் போய், நிறைய சம்பாதித்து, சொத்து சேர்ப்பதாகவும் செய்தி. அதன்
அடையாளமாக, ஊரிலிருக்கும் அவனது பெற்றோர், மகன் அனுப்பிய பணத்தில், புது
வீடு கட்டினர். நிறைய நில புலன்கள் வாங்கினர்.இதையெல்லாம் பார்த்த
ஊர்க்காரர்கள், 'சொன்னபடி செய்றானே...' என்று வியந்தனர்.பழனிக்கும்,
'கண்ணன் எப்போது வேண்டுமானலும் ஊருக்கு வந்து, தன்னைப் பார்த்து, 'இப்ப
என்ன சொல்றீங்க...' என்று, நெஞ்சை நிமிர்த்தி கேட்பானே... அவனுக்கு என்ன
பதில் சொல்வது, முகத்தை எங்கே வைத்துக் கொள்வது...' என்று அவ்வப்போது
எண்ணிக் கொள்வார். இந்நிலையில், எதிர்பாராமல் அவனைப் பார்த்ததும்,
அதிர்ந்து தான் போனார்.மாலை, மரியாதை நிமித்தமாக, பரிசுப் பொருட்களோடு
தலைவர் வீட்டுக்கு சென்று, அதை, அவரிடம் கொடுத்து, விலகி நின்றான்
கண்ணன்.''உட்கார்...''''பரவாயில்லங்க.''''ஆக, அன்னைக்கு, ஊர் முன்னால,
ஐயாவுக்கு எதிரா சவால் போட்டது போல, நிறைய சம்பாதிச்சுட்டேன்னு தெரியும்.
அதை காட்டி, ஐயாவை மட்டம் தட்டி பேசலாம்ங்கற நினைப்போடு, ஊருக்குள் கால்
வச்சிருந்தா, அந்த நினைப்பை மாத்திக்க...'' என்று, ஆரம்பித்த மாரிசாமி,
''காத்தடிச்சா, காகிதம் கூட கோபுர உச்சிக்கு போகும். அதுக்காக, காகிதம்,
கோபுரத்தை விட பெரிசாயிடாது... மனசுல வச்சுகிட்டு, ஐயாகிட்ட மரியாதையா
பேசு,'' என்று, எச்சரிக்கை விடுக்க, கண்ணன் குறுக்கிட்டு, ''என்னங்க...
என்னென்னமோ பேசுறீங்க; நான், ஏன் தலைவர எதிர்க்கணும்... அறியாத வயசுல,
தெரியாம பேசினதை, இன்னுமா நினைவில் வச்சிருக்கீங்க... அதுக்காக, என்னை
மன்னிச்சுடுங்க; சம்பாதிக்கறதுக்கு, எவ்வளவு பாடுபடணும்ன்னு, அனுபவம் கத்து
கொடுத்துடுச்சு. இன்னைக்கு, உலகம் விஞ்ஞான மயமாயிருச்சு.''கொஞ்சம் கவனமா
கையாண்டா, சர்வதேச அளவில், தொழில் செய்து, கோடிகளை சம்பாதிச்சுடலாம். ஆனா,
இந்த வசதி, வாய்ப்பு ஏதும் இல்லாத காலத்தில், விவசாயத்தின் மூலம் கிடைத்த
சொற்ப பணத்தை மட்டும் சேர்த்து, பாதுகாத்து, பெருக்கி, அதில், தன்
குடும்பத்தையும் பார்த்து, வேலையாட்களின் தேவைகளையும் நிறைவேற்றி,
தேவைப்பட்ட நேரத்தில், வேண்டியவர்களுக்காக, விருந்து உபசாரம் நடத்தி,
அதேநேரம், கையில் உள்ள பணம், கரைஞ்சு போகாமலும் பாதுகாத்து, இன்னை
வரைக்கும், தலைமை பண்போடு இருக்கிறது சாதாரண காரியமா...''நீங்க சொன்னது சரி
தான்... கோபுரம், கோபுரம் தான்; காகிதம் காகிதம் தாங்க,'' என்று, வணங்கி
வெளியேறினான்.''என்னமோ பயந்தீங்களே... பாத்தீங்களா... அவனே, தன் வாயால்,
காற்றில் பறக்கிற பேப்பர்ன்னு சொல்லிகிட்டு போறான்,''என்றார்,
மாரிசாமி.''மாரிசாமி... உனக்கு புரிஞ்சது அவ்வளவு தான்; அவன்
ஜெயிச்சுட்டாண்டா!''''என்ன சொல்றீங்க?''''இன்னைக்கு, கோடிகள்
சம்பாதிக்கிறது சுலபம்ன்னு சொன்னான்; ஆனால், எல்லாராலும் சம்பாதிக்க
முடியலயே... இவனது திறமை, அறிவு, முயற்சின்னு, பலதும் சேர்ந்து, நிறைய
சம்பாதிக்க வழி வகுத்திருக்கு. எனக்கு இருக்கிற சொத்துக்களை விட, அவன்,
இப்ப, பல மடங்கு பணக்காரன்; அதுகூட ஒரு விஷயமில்ல... சொற்ப பணம்
வச்சிருக்கிற எனக்கு, இன்னை வரைக்கும் பணிவும், அடக்கமும் கை கூடல. ஆனா,
நிறைய சம்பாதிச்சும், அது, பெரிய விஷயமே இல்லங்கற மாதிரி அடக்கமா பேசி,
பணிவா நடந்துகிட்டானே... அந்த வகையில், அவன் ஜெயிச்சுட்டான்,'' என்று
சொல்லி, கண்ணன் போவதை, மதிப்புடன் பார்த்தபடி நின்றார், பழனி.
படுதலம் சுகுமாரன்
Thanks : Dinamalar
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36166&ncat=2
படுதலம் சுகுமாரன்
Thanks : Dinamalar
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36166&ncat=2
Comments
Post a Comment