சின்ன தவறும் பெரிய சறுக்கலும்!

மகன், வியாபாரம் செய்யும் அழகை, சற்று தொலைவில் இருந்து, ரசித்து பார்த்தார், மகாலிங்கம்.
வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் பெரிய அங்காடி அது! 10 ஆயிரம் சதுர அடியில், 'ஏசி' வசதியுடன், 40 ஊழியர்களுடன், இயங்கியது.
ஆண்டு, 'டர்ன் ஓவர்' பல கோடி.
'சிட்டியில் நம்பர் ஒன் கம்பெனி...' என்று பேரெடுத்து, வெற்றிகரமாக நடக்கிறது.
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், பத்துக்கு பத்து வாடகை இடத்தில், ஒரு சில பொருட்களுடன் துவங்கப்பட்டது. கடுமையான உழைப்பில், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, இன்று ஆலமரமாய் நிற்கிறது.
'தனக்கு பின் யார் கவனிப்பர்...' என்ற கவலைக்கு இடம் கொடுக்காமல், மகன் பரத், பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் மனம் பரவசம் அடைந்தது. சென்ற ஆண்டு தான், பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தான். 'படிப்பு வேறு, அனுபவம் வேறு. இவன் வியாபாரத்தை கற்று பொறுப்புக்கு வர நான்கைந்து ஆண்டுகளாகலாம்...' என்று நினைத்திருக்க, சில மாதங்களிலேயே, தொழில் நுணுக்கங்களை கற்று, வியாபாரத்தை, மேலும் அதிகரிக்க செய்ததில் மகாலிங்கத்துக்கு பெருமை.
கம்பெனி பிரதிநிதியே, அவர்களது புது மாடல் குளிர்சாதன பெட்டி குறித்து, வாடிக்கையாளரின் சந்தேகங்களுக்கு தக்க பதில் அளித்து, 'கன்வின்ஸ்' செய்ய முடியாமல் தவித்த போது, பரத், வாடிக்கையாளரிடம் பேசி, திருப்தியடைய வைத்ததோடு, அப்பொருளை, மகிழ்ச்சியுடன் வாங்கவும் வைத்து விட்டதை பார்த்து, மனதிற்குள், 'சபாஷ்...' போட்டார்.
'இது போதும்... எதிர் காலத்தில், யாராலும் வீழ்த்த முடியாத, பிசினெஸ் ஆளுமைகள் பட்டியலில், இவனும் ஒருவனாக இருப்பான்...' என்று தீர்மானித்தார்.
அந்நேரம், கடைக்குள் ஒருவன் நுழைந்தான். பரத் வயது இருக்கும்; பொருள் வாங்க வந்தவன் போல் தெரியவில்லை. தோற்றம், நன்றாக இருந்தாலும், உடைகள் அவன் ஏழ்மையை பறைசாட்டியது. அதை மறைக்கும் விதமாக, மலர்ச்சியாக இருந்தது முகம். அவன், நேராக பரத்தை நோக்கி போனான்.
பரத், சேல்ஸ்மேனுடன் பேசியபடி இருந்ததால், அவன் தன்னை பார்க்கும் வரை காத்திருந்தான். இடையில், ஒருமுறை பரத் திரும்பி பார்த்தாலும், வந்திருந்தவனை கண்டுகொண்டதாக தெரியவில்லை. 'ஒருவேளை, வந்தவனை பரத்துக்கு தெரியாதோ என்னமோ... நாம் போய் யார், என்ன என்று விசாரிக்கலாமா...' என்று நினைத்தார்.
அவரைப் பொறுத்தவரை கடைக்கு, வருபவர்கள் யாராயிருந்தாலும், காத்திருக்க கூடாது. உடனுக்குடன் விசாரித்து, தேவைகளைப் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும். அதை, தன் கொள்கைகளில் ஒன்றாக கடைப்பிடித்து வந்தார்; இது, பரத்துக்கும் தெரியும்.
இருந்தும், ஒருவனை நிற்க வைத்திருப்பது, ஆச்சரியத்தை கொடுத்தது. இருக்கையை விட்டு எழுந்தார். அதேநேரம், பரத் வந்திருந்தவனை பார்த்து, ஏதோ பேச, பதிலுக்கு அவனும் ஏதோ கூறினான். உடனே, பரத்தின் முகம் இறுகுவதும், வந்தவனின் முகம், ஏமாற்றமடைவதையும் பார்த்தார்.
'வந்தவன், பண உதவி கேட்டு, பரத் தர முடியாது...' என்று சொல்கிறானோ என்று ஐயம் எழுந்தது.
அப்படி இருந்தால், அதுவும் அவர் கொள்கைப்படி தப்பு. யார் வந்தாலும், அவரவர் நிலைமை, தேவையறிந்து, உதவி செய்து அனுப்ப வேண்டுமே தவிர, கொடுக்க மறுத்து, சம்பந்தப்பட்டவரின் மனம் வருந்தும்படி செய்வது கூடாது. உதவி செய்வதற்கென்றே, தினசரி வருவாயில், அரை சதம் ஒதுக்கப்படுகிறது. எத்தனையோ ஆதரவற்றோர் விடுதிகளுக்கு, அறக்கட்டளைகளுக்கு, தனி நபர்களுக்கு பணம் போகிறது.
அதை இழப்பாக கருதுவதில்லை; உழைப்பால் வந்ததில், கொஞ்சம் உதவினோம் என்ற, மன திருப்தி. அதனால் ஏற்படும் நற்பெயர், கம்பெனியின் வளர்ச்சிக்கு துணை போகிறது.
இத்தனையும், பரத்துக்கு சொல்லிக் கொடுத்தும். 'ஏன் வந்தவரிடம் கடுமையாக நடந்து கொள்கிறான்...' என்று யோசித்தார்.
அவர்கள் இருவருக்கும் இடையில் போய் நின்று, விவரம் அறியவும் விரும்பவில்லை; அது நாகரிகமும் இல்லை. அது, பரத்தின் சுதந்திரத்தில் குறுக்கிடுவது போல் இருக்கும், என்று நினைத்தார்.
மகிழ்ச்சியோடு வந்தவன், வருத்தத்தோடு வெளியேறினான்.
மகாலிங்கத்துக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை; பரத்திடம் சென்றவர், ''தம்பி... இப்ப உன்னைப் பாக்க வந்துட்டு, வருத்தத்தோடு திரும்பி போறாரே ஒருவர்... யாரு அவர், என்ன விஷயமா வந்தாரு?''
அவன் அலட்சியமாக, ''அதை விடுங்கப்பா... அது ஒரு விஷயமே இல்ல,'' என்றான்.
''விஷயத்தை சொல்லு... அது விஷயமா, இல்லயான்னு நான் சொல்றேன்.''
அப்பாவின் குரலில் தெறித்த கண்டிப்பு, பரத்தை கட்டுப்படுத்தியது.
''மேனேஜர் வேலை வேணுமாம்... கேட்டு வந்தான்; இல்லன்னு சொன்னேன்.''
''நம்புறாப்ல இல்லயே... வேலை கேட்டு வர்றவன் பைலும், கையுமாய் வருவான்; இவன் வெறுமனே நேரே உன்கிட்ட வந்தான். ஆக, அவனுக்கு, உன்னை ஏற்கனவே தெரிந்திருக்கிறது. எப்படி தெரியும்...''
''இந்த விசாரணை அவசியமாப்பா?''
''அதனால தான் கேட்கிறேன்... நீ பொறுப்பில் இல்லன்னா, எதுவும் கண்டுக்க மாட்டேன்; பொறுப்புல இருக்கே. எல்லா விஷயத்திலும், 100 சதவீதம் கவனத்தோடு இருக்கணும். சின்ன தவறு கூட, பெரிய சறுக்கலை கொடுத்திடும்; சொல்லு...''
''ஒண்ணுமில்லப்பா... காலேஜ்ல எங்கூட ஒண்ணா படிச்சவன்; படிக்கையில, 'ரொம்ப சிரமத்தில் இருக்கேன். படிப்பை விட, வேலை அவசியமா இருக்குன்னு சொன்னான். 'எங்கப்பா, பெரிய கடை வச்சுருக்கார். நான், படிப்பு முடிச்சுட்டு, பொறுப்புக்கு வரும் போது, என்னை வந்து பார்... உனக்கு மேனேஜர் போஸ்ட்டே கொடுக்கறேன்'னு, பேச்சுக்கு சொன்னேன். இப்ப வந்து, அன்னைக்கு சொன்னியே மேனேஜராக்குறேன்னு... இன்னைக்கு தரமுடியுமான்னு கேட்கறான். பைத்தியக்காரன்... என்ன செய்யட்டும். தவிர, இப்போதைக்கு கடைக்கு ஆள் தேவையுமில்ல; சொன்னா புரிஞ்சுக்கல. அதான், கொஞ்சம் கடுமையா பேசினேன்.''
''தம்பி... சீட்டை விட்டு இறங்கி வா. விரட்டினியே, உன் கல்லூரி நண்பர்... அவரை, உடனே தேடி கூட்டிகிட்டு வா,'' என்றார்.
''அப்பா...''
''சொன்னத செய்,'' என்றதும் விரைந்தான், பரத்.
சிறிது நேரத்தில் திரும்பினான்; உடன் நண்பனும்!
''அவரை, ஏதாவது ஒரு, 'போஸ்டில்' உட்கார வை; சம்பளம், வேலை எல்லாம் பிறகு முடிவு செய்யலாம். முதலில், 10 ஆயிரம் ரூபாய முன்பணமா கொடு,'' என்று உத்தரவிட்டார்.
''என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டீங்க அப்பா... நான் அனுப்பியவனை, என்னை விட்டே, கூட்டிட்டு வரச்சொல்லி, வேலை கொடுத்து, பணமும் கொடுக்கச் சொல்றீங்க... அவன் எப்படி என்ன மதிப்பான்,'' சாப்பாட்டு மேஜையின் முன் உட்கார்ந்து, கோபத்தைக் கொட்டினான் பரத்.
''மகாபாரதத்தில், ஒரு கதை; துரோணரும், துருபத நாட்டு இளவரசன் துருபதனும் ஒண்ணா குருகுலத்துல படிச்சவங்க. அப்ப, துருபதன், துரோணர்கிட்ட, 'நான் படிப்பு முடிச்சு, நாட்டுக்கு திரும்பினதும், அப்பா என்னை அரியாசனத்தில் உட்கார வச்சிடுவாரு; நாடே எனக்கு சொந்தமாயிடும். அப்ப, உனக்கும் ஒரு பங்கு தருவேன்'னு சொன்னான்.
''காலங்கள் ஓடுச்சு. சொன்னது போல, அரியணை ஏறிட்டான் துருபதன்; துரோணர், வறுமையில் விழுந்துட்டார். அப்ப, படிக்கிற காலத்தில் நண்பன் சொன்னது நினைவு வர, துருபதனை பார்க்கப் போனார். போய் பழைய சம்பவத்தை நினைவுபடுத்தி, 'ராஜ்யத்தில், பங்கு தருவதாக சொன்னே... இப்ப, எனக்கு தேவைப்படுது; கொடு'ன்னு கேட்டார். அவர், அப்படி கேட்டிருக்க கூடாது தான்; ஆனாலும், துருபதன் கொடுத்த வாக்குக்காக, நாட்டில் பங்கு கொடுக்கலன்னாலும், ஒரு வீட்டையாவது கொடுத்திருக்கலாம். 'ஒண்ணும் இல்ல; போ'ன்னு விரட்டியனுப்பிட்டான். விளைவு என்னாச்சு தெரியுமா... பின் நாளில், தன் சீடர்களை விட்டே, துருபத மன்னனை வீழ்த்தி, தன் காலடியில் விழ வைத்தார் துரோணர்,'' என்று சாப்பிட்டுக் கொண்டே சொன்னார்.
''அப்ப, இவன் எனக்கெதிரா கிளம்பி, என்னை வீழ்த்திடுவான்னு பயப்படறிங்களா...''
''ஏன் நடக்காது... வாக்கு கொடுத்தது தப்பு. அதை நம்பி வந்தவனுக்கு, நீ சொன்னதை தரமுடியலன்னாலும், ஏதாவது ஒரு வேலையை கொடுத்து, தேவையை பூர்த்தி செய்யணும். அவன் பொழுதுபோக்குக்கா வேலை கேட்டு வந்திருக்கான்; வறுமை காரணமாக உன்கிட்ட, நம்பிக்கையோடு வந்திருக்கான். அவனை முகத்திலடிச்சாற்போல் பேசி அனுப்பினால், அவனது ஒட்டு மொத்த கோபம், உன் மேல் திரும்பும்... உடனே, அவன் போட்டி கம்பெனி ஆரம்பிச்சு, உன்னை வீழ்த்திடுவான்னு சொல்ல வரல; அப்படி நடக்காதுன்னும் சொல்ல முடியாது.
''ரொம்ப வறுமையிலிருக்கவங்க, ரொம்ப அசிங்கப் படறவங்ககிட்ட தான், சாதிக்கிற வேகமும், மனத்துடிப்பும் வரும்; சாதிக்கவும் செய்வாங்க. உன் நண்பனால், அவ்வளவு சாதிக்க முடியாட்டியும், கசப்பில், உனக்கெதிராக ஒரு துரும்பையாவது கிள்ளி போட மாட்டாரா... அது கூட, நிறுவனத்துக்கு ஆபத்து தான். எதிரியை கூட, நண்பராக்கி கொள்ள வேண்டியது, தொழில் பாடம். நீ நண்பனை, எதிரியாக்கலாமா,'' என்று, பக்குவமாக சொல்ல, புரிந்து கொண்டவனாக தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.
மறுநாள் வேலைக்கு வந்த நண்பனிடம் கைகுலுக்கி, ''சாரிடா.. நீ வந்த நேரம், நான் டென்ஷனாய் இருந்தேன்; அதான் உன்கிட்ட கடுமையா நடந்துகிட்டேன்,'' என்றான்.
''உடனே தேடி வந்து, வருத்தம் தெரிவிச்சு, கூட்டி வந்து வேலையில் வச்சியே... உன்னை நினைக்க, எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா,'' என்று நெகிழ்ந்தான், நண்பன்.

Thanks : Dinamalar

Comments

Popular posts from this blog

தழும்பு!

சொந்த பந்தம்

அன்பு