கைத்தடி!

கங்கை நதியில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்! அப்போது ஒரு அழகிய கைத்தடி மிதந்து வந்து கொண்டிருந்தது! எழில் மிகுந்த அழகிய வேலைப்பாடு மிகுந்த கைத்தடி அது! அதைக் கவனித்த வியாபாரி ஆசையுடன் அதை எடுத்துக்கொண்டு கரையை நோக்கி நீந்தினான். நதி வேகமாக நீர்ச்சுழல்களுடன் ஓடிக் கொண்டிருந்தது! நீந்திக் கொண்டிருந்த வியாபாரி ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்! தப்பிக்க கடும் முயற்சி செய்தான். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு உயிர் பிழைத்தான்! போராட்டத்தின் போது நதியில் தான் ஆசையாய்க் கண்டெடுத்த கைத்தடியை நழுவ விட்டுவிட்டான்! கரைக்கு வந்து சேர்ந்த அவன், அந்த அழகான கைத்தடியை இழந்துவிட்டேனே என்று கதறினான்! அப்போது அங்கு இருந்த ஒரு துறவி இதைக் கவனித்தார். அவர் வியாபாரியை நோக்கி, "அப்பா நீ இங்கு வந்தபோது வெறுங்கையோடு தானே வந்தாய்?'' என்று கேட்டார். "ஆமாம்'' "ஆனால் இப்போது கைத்தடியை நழுவ விட்டு விட்டதாகக் கூறுகிறாயே?'' வியாபாரி நதியில் நடந்ததைக் கூறினான். "உன்னைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது...கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது....,நீ அதைச் சிறிது நேரம் வைத்திருந்தாய்....,இப்போது மீண்டும் கங்கையில் மிதந்து கொண்டு போகிறது....அப்படி இருக்கும்போது அது உன் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறாய்?....இரண்டு நிமிடங்கள் கையில் வைத்திருந்ததால் அது உனதாகிவிடுமா? அது உன்னுடையது என்று சொந்தம் கொண்டாட உனக்கு உரிமை பெற்று விட்டாயா?...வாழ்வில் எதுவும் நிச்சயம் இல்லை....கிடைக்கும்போது மகிழ்ச்சியுறவோ....இழக்கும்போது துக்கமடையவோ ஒன்றும் இல்லை...'' என்றார் துறவி! அதிலிருந்த ஆழமான உண்மையை உணர்ந்தான் வியாபாரி! மனம் தெளிந்தது! -ஜோ.ஜெயக்குமார் Thanks : Dinamani

Comments

Popular posts from this blog

தழும்பு!

சொந்த பந்தம்

அன்பு