நீதிமணி!!!
சில நாட்களாக அரண்மனையின் தானியக் கிடங்கிலிருந்து திருட்டுப் போய்க்கொண்டிருந்தது. திருடன் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளோரைக் கைது செய்யும்படி உத்தரவாகியிருந்தது! பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். திருடனும் அதில் அகப்பட்டிருந்தான்! ஆனால் திருடன் யாரென்று அடையாளம் காண இயலவில்லை.
நீதிபதியின் முன்னால் கைதான அனைவரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
நீதிபதி எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். பிறகு, "குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி வழங்கும் பொறுப்பை இறைவன் கோயில் கண்டாமணியிடம் ஒப்படைத்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அங்கே வாருங்கள்.'' என்றார்.
கோயில்மணி ரொம்பச் சக்தி வாய்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் ஒலி அவ்வூர் முழுவதற்கும் கேட்கும். அத்தனை பெரிய மணி!
எல்லோரும் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். கண்டாமணி நந்தி மண்டபத்தின்முன்னால் இருந்தது. அதைச் சுற்றிப் பட்டுச் சேலை கட்டி மறைக்கப்பட்டிருந்தது.
நீதிபதி கூறினார்."நீங்கள் ஒவ்வொருவரும் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து மணியின் அருகில் சென்று உங்கள் உள்ளங்கை அதில் பதியும்படி அதைத் தொட்டால் போதும்.....யார் திருடினானோ அவன் கை பட்டவுடன் மணி ஒலி எழுப்பி அதிரும்! குற்றமற்றவர்களானால் எவ்வித ஒலியும் இருக்காது''.
கூட்டத்தில் கசமுச வென்று பேச்சு எழுந்தது. முடிவில் எல்லோரும் ஒப்புக்கொண்டனர்.
ஒவ்வொருவாராக உள்ளே சென்றனர். வெளியில் பலருக்கும் உள்ளம் படபடத்தது. மணியோசை எழவில்லை. அடுத்தடுத்து பலரும் உள்ளே சென்றனர். ஆனால் மணி ஓசை எழவில்லை. எல்லோரும் உள்ளே சென்று வந்துவிட்டார்கள். மணி ஒலிக்கவே இல்லை!
நீதிபதி எல்லோரையும் ஒவ்வொருவராகக் கையைக் காண்பிக்கச் சொன்னார். அனைவர் கைகளிலும் ஒரே கருப்புக் கறை! உடைகளில் துடைத்துக் கொண்டால் உடைகள் கருப்பாகிவிடும்! அனைவரும் கையில் கருப்புக் கறையுடன் நின்றிருந்தனர்.
"அதைக் கழுவிக்கொண்டால்தான் போகும்....அப்படி ஓரமாய் நில்லுங்கள்'' என்றார் நீதிபதி.
மற்றவர்களின் கைகளைச் சோதித்தார் நீதிபதி. பதினாறு பேர்களின் கைகளிலும் கருப்புக் கறை! கடைசியாக ஒருவன் உள்ளே சென்றான். மணியின் ஒலி எழும்பவே இல்லை. வெளியே வந்த அவன் கையை நீட்ட அது "பளிச்'சென்று இருந்தது!
நீதிபதிக்குக் கோபம் பொங்கியது. "இவன்தான் திருடன்...! கைது செய்யுங்கள்!''என்றார்.
அவன் மிரண்டான்...."மணிதான் ஒலிக்கவில்லையே'' என்று குழறினான்.
"குற்றம் புரிந்ததினால் நீ மணியைத் தொடவே இல்லை. தொட்டால் மணி ஒலித்து உன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயம்!....மணியைத் தொட்டவர்கள் கைகளிலெல்லாம் அதில் பூசப்பட்டிருந்த விளக்குக் கரி படிந்திருக்கிறது. திட்டமிட்டே மணியின் மேல்புறத்தில் கரியைப் பூசச் செய்தேன்....உண்மைக் குற்றவாளையைக் கண்டுபிடிக்க!'' என்றார் நீதிபதி!
இப்படிச் சொன்னவுடன் அந்தத் திருடன் நீதிபதியின் கால்களில் விழுந்து குற்றத்தை ஒப்புக்கொண்டான்!
அனைவரும் நீதிபதியின் மதியூகத்தை வியந்து வீடு நோக்கிச் சென்றார்கள்!
Thanks : Dinamani
Comments
Post a Comment