செல்ல மகளுடன் ஒரு நாள்!

என்னங்க... சவுந்தர்யாவ கவனமா பாத்துக்குவீங்கள்ல...'' திரும்ப திரும்ப கேட்டாள், மீனாட்சி.
''ஒருநாள் தானே சமாளிச்சுக்குவேன்; நீ, தைரியமா போயிட்டு வா,'' என்றான் நடேசன்.
''அதுக்கில்லங்க... சவுந்தர்யா, 'நார்மலான' குழந்தை இல்ல. ஒவ்வொரு நிமிஷமும், அவளை கண்காணிச்சுக்கிட்டே இருக்கணும். நீங்க, கம்ப்யூட்டரை தொறந்து வச்சு, கதை எழுத ஆரம்பிச்சுட்டா உலகத்தையே மறந்துடுவீங்க... அதான் பயப்படுறேன்,'' என்றாள், நம்பிக்கை இல்லாமல்!
''இது கூடவா எனக்கு தெரியாது... நீ நிம்மதியா போயிட்டு வா,'' என்றான்.
சவுந்தர்யாவுக்கு, 10 வயதாகிறது. அவளுடைய இரண்டு வயதில், பேச்சு வரவில்லை; காதும் கேட்காதது போல் தோன்ற, ஈ.என்.டி., ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் அழைத்துச் சென்று காண்பித்ததில், 'காது கேட்கும் திறனெல்லாம் நன்றாக தான் இருக்கிறது...' என்றார்.
நடேசனின் அம்மாவோ, 'சில பிள்ளைகள், 'லேட்'டாக தான் பேசும்; இவனெல்லாம், ரெண்டு வயசுக்கு மேல தான் பேசினான்...' என்று, நடேசனையே உதாரணமாய் சொன்னாள்.
அவள் கூறியது போல், இரண்டரை வயதுக்கு மேல், கொஞ்சம் கொஞ்சமாய் பேச ஆரம்பித்தாள், சவுந்தர்யா. மூன்று வயதானதும், அருகில் உள்ள பள்ளியில், எல்.கே.ஜி., சேர்த்தனர்.
மீனாட்சியும் வேலைக்கு செல்வதால், அதுவரை குழந்தையை பார்த்து வந்த நடேசனின் அம்மா, 'நடேசா... பாப்பாவ ஸ்கூல் சேர்த்தாச்சுல்லே... இனிமே, நீங்களே அவளப் பாத்துக்குங்க; உங்க அப்பா, ஊருல தனியா கிடந்து கஷ்டப்படறார்...' என்று சொல்லி, கிராமத்திற்கு கிளம்பி விட்டாள்.
நல்ல வேளையாக, பள்ளியிலேயே, நர்சரியும் இருந்ததால், மீனாட்சி, வேலை முடிந்து வரும் வரை, அவர்களே பார்த்து கொண்டனர். ஒருமுறை, சவுந்தர்யாவின் டீச்சர் தான், மீனாட்சியிடம், 'சவுந்தர்யா நார்மலா இல்லீங்க... அவளுக்கு, ஆட்டிசம் பாதிப்பு இருக்கிறாப்புல தெரியுது. நீங்க, எதுக்கும் அதுக்கான டாக்டரை போயி பாருங்க...' என்று, ஆலோசனை சொன்னாள்.
அதைக் கேட்டதும், மீனாட்சிக்கு கோபம் வந்து, 'நீங்க, உங்க வேலைய மட்டும் பாருங்க; டாக்டர் ஆக முயற்சிக்காதீங்க...' என்று, 'வெடுக்'கென்று சொல்லி, குழந்தையை தூக்கி வந்து விட்டாள்.
இதைப் பற்றி நடேசனிடம் சொல்லி ஆதங்கப்பட்ட போது, 'எதுக்கு இப்ப கோபப்படுற... நம்மள விட, அவங்க தான் குழந்தை கூட நிறைய நேரம் இருக்குறாங்க; அதோட எனக்குமே, சவுந்தர்யாகிட்ட, அவள் வயசுக்குரிய துறுதுறுப்பு கொறைச்சலா இருக்குறாப்புல தான் தோணுது...' என்று சொல்லி, ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் அழைத்துப் போனான்.
அவர், சவுந்தர்யாவிற்கு ஏகப்பட்ட பரிசோதனைகள் செய்து, ஆசிரியை சொன்னதை உறுதிப்படுத்தினார். 'குழந்தையை கூர்மையா கவனிச்சிருந்தீங்கன்னா, இன்னும் சீக்கிரமே கண்டுபிடிச்சு, சிகிச்சையை ஆரம்பிச்சிருக்கலாம்...' என்றார்.
'ரொம்ப, 'லேட்' செய்துட்டமோ டாக்டர்...' என்று, அழத் துவங்கினாள், மீனாட்சி. 'பரவாயில்ல... இப்பவாவது கண்டுபிடிச்சு, கூட்டிட்டு வந்தீங்களே... பயப்பட வேணாம்; ஆட்டிசம் பாதிப்புங்குறது, சின்ன குறைபாடு தான்; தீவிர நோயெல்லாம் இல்ல. நீங்க ஒத்துழைச்சா, அதை, கொஞ்சம் கொஞ்சமா நிவர்த்தி செய்துடலாம்...' என்று, நம்பிக்கை அளித்து, அனுப்பி வைத்தார்.
டாக்டரிடம், 'ஆட்டிச குறைபாடு எப்படி வருகிறது' என மீனாட்சி கேட்ட போது, 'உறுதியான காரணங்கள்ன்னு எதையும் சொல்ல முடியாது; ஆனால், இது பரம்பரை குறைபாடாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்...' என்று சொல்லியிருந்தார்.
வீட்டிற்கு வந்ததும், 'இது, உங்க பரம்பரையில் உள்ள குறைபாடு தான்; எனக்கென்னமோ, உங்களுக்குமே இந்தக் குறை இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. கதை, கவிதைன்னு நீங்க எழுதுறதெல்லாம் அதனால தான்...' என்ற மீனாட்சி, நடேசனை தேடிப் பிடித்து, தனக்கு திருமணம் செய்வித்த, தன் அப்பாவை திட்ட துவங்கி விட்டாள்.
'சரி... அப்படி தான் இருக்கட்டுமே! அதுக்கு இப்ப என்ன தான் செய்யணும்ங்குற...' என்று சிரித்துக் கொண்டே கேட்டான், நடேசன்.
'உங்க அம்மாவ நம்ம கூட வந்து இருக்கச் சொல்லுங்க; அவங்களே, சவுந்தர்யாவை பாத்துக்கட்டும்...' என்றாள்.
ஆனால், நடேசனின் அம்மா சம்மதிக்கவில்லை. மேலும், 'இம்மாதிரி குழந்தைகளை பராமரிக்கிற பொறுமையும், புத்திசாலித்தனமும், அம்மாவிற்கு இல்லை...' என்று நடேசனும் அபிப்ராயப்பட்டான்.
டாக்டரின் ஆலோசனையின்படி, சவுந்தர்யாவை, ஆட்டிசம் குறைபாடுள்ள, குழந்தைகள் பயிலும் சிறப்புப் பள்ளியில் சேர்த்தனர். முதலில் சண்டை போட்டாலும், பின், வேலையை விட்டு நின்று, சவுந்தர்யாவுடனேயே இருக்கத் துவங்கினாள், மீனாட்சி.
சவுந்தர்யாவை பராமரிக்க, மீனாட்சி சிரமப்படுவது, அவன் வேலை முடிந்து தாமதமாக வரும் நாட்களில், வீட்டில், வெடிக்கும் சண்டையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து சிகிச்சை எடுத்தும், சவுந்தர்யாவின் நடவடிக்கைகளில், பெரிய மாற்றம் எதுமில்லை.
உடல் மட்டும், 'திகுதிகு'வென வளர்ந்தது. ஆனால், மன வளர்ச்சி...
'போட்டிகள் நிறைந்த உலகில், சவுந்தர்யா, எப்படி தான் சமாளிக்கப் போகிறாளோ...' என்று, இருவரும் மிகவும் கவலைப்பட்டனர். இதுபற்றி டாக்டரிடம் ஒருமுறை குறைப்பட்டுக் கொண்ட போது, 'நீங்க, பொறுமையா இருக்கணும். மெதுவா தான், இம்மாதிரி குழந்தைகள், 'பிக்கப்' ஆவாங்க. ஆனா, இந்த மாதிரி குழந்தைகளுக்கு, விசேஷ திறமைகள் ஏதாவது ஒளிந்து இருக்கும். அது, கடவுள் இவங்களுக்கு குடுக்கிற பரிசு அல்லது காம்பன்சேஷன். அது என்னன்னு கண்டுபிடிச்சு, அதுல குழந்தைய ஈடுபடுத்தினா, சீக்கிரம், 'ரெக்கவர்' ஆவாங்க; அதை வச்சும் பொழச்சுக்குவாங்க...' என்றார்.
இந்நிலையில், மீனாட்சியின் கல்லூரி சிநேகிதி ஒருத்தி, மதுரைக்கு அருகில் உள்ள அவளது கிராமத்தில், திடீரென்று இறந்து விட்டாள். தன் தோழியின் முகத்தை கடைசிமுறையாக பாத்தே ஆகவேண்டும் என்று மதுரை கிளம்பினாள், மீனாட்சி. சவுந்தர்யாவை தன்னுடன் அழைத்துச் சென்றால், துக்க வீட்டில், அவளை பராமரிப்பது கடினம்; மேலும், தன் மகளை, மற்றவர்கள் இளக்காரமாக பார்ப்பதை, அவள் விரும்பவில்லை.
'நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை லீவு தானே... நான் பாத்துகிறேன்; நீ, தைரியமா போயிட்டு வா' என்று, நடேசன் நம்பிக்கையூட்டவும், வேறு வழி இல்லாமல், சனிக்கிழமை இரவு, கிளம்பிப் போனாள்.
மீனாட்சி கிளம்பும் போது, சவுந்தர்யா, அழுது ஆர்ப்பாட்டம் செய்வாளோ என்று, இருவருமே பயந்தனர். ஆனால், அவள் தலையைத் தலையை ஆட்டி, ''அப்பாவ நான் பத்தரமாப் பாத்துக்கிறேன்ம்மா,'' என்று சொல்லவும், மீனாட்சிக்கு கண்ணீர் பொங்கி விட்டது.
சவுந்தர்யா பிறந்ததிலிருந்து, ஒருநாள் கூட, அவளுக்கான காரியங்கள் எதையும், நடேசன் செய்தது இல்லை. எல்லாமே மீனாட்சி தான் செய்தாள். இப்போது, அவனுக்கு, மகளை பராமரிப்பது, மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. 'அவசரப்பட்டு, சவுந்தர்யாவை பாத்துக் கொள்வதாக சொல்லி விட்டோமோ...' என்றிருந்தது அவனுக்கு!
ஒரே நாளில், பொறுமையை இழந்து விட்டான்.
அவளாக சிருஷ்டித்துக் கொண்ட உலகில் இருப்பதால், அவளுக்கு எதிலும் கவனமே இருப்பதில்லை. ஒவ்வொரு செயலையும் செய்ய வைப்பதற்கு, பலமுறை சொல்ல வேண்டி இருந்தது.
குளிப்பதற்கு பாத்ரூமிற்கு போனால், பைப்பிலிருந்து விழும் தண்ணீரை, மணிக்கணக்கா பார்த்தவாறு நின்றாள். தண்ணீர் விரயமாகிறதே என்று, நடேசன் பைப்பை மூடினால், புரியாத வார்த்தைகளில் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்தாள். வலுகட்டாயமாக குளிக்க வைத்தான், துவட்டிக் கொள்ள முரண்டு பிடித்தாள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சவுந்தர்யாவை சாப்பிட வைப்பது, பெரும்பாடாக இருந்தது. வலிந்து உணவை ஊட்டினால், கீழே துப்பினாள். நடேசனுக்கு கோபம் வந்தது. மகளை அடிக்காமல் இருப்பதற்கு, பெரிதும் பிரயத்தனப்பட்டான்.
மொபைல்போனில், மீனாட்சியிடம், சவுந்தர்யா சாப்பிட அடம் பிடிப்பது பற்றிச் சொல்லவும், ''ஏதாவது கதை சொல்லுங்க சாப்பிடுவா...'' என்றாள்.
''குழந்தைகளுக்கான கதை எதுவும் எனக்குத் தெரியாதே,'' என்றான் நடேசன்.
''எழுத்தாளர்ன்னு பெருமை வாய் கிழியது; கதை சொல்ல தெரியாதுன்னா என்ன அர்த்தம்... எதையாவது சொல்லி சமாளியுங்க,'' என்று, எரிந்து விழுந்தாள்.
நடேசன் சொன்ன கதை எதுவும், சவுந்தர்யாவை ஈர்க்கவில்லை. ''அப்பா... உனக்கு கதையே சொல்லத் தெரியல; நான் உனக்கு கதை சொல்லட்டுமா...'' என்றாள்.
''அப்பாவுக்கு கதை சொல்லிக்கிட்டே சாப்பிடுவியாம்,'' என்று சொல்லவும், தலையை ஆட்டி, சாப்பிட்டவாறு கதை சொல்ல துவங்கினாள்...
''ஒரு ஊருல குருவியும், குரங்கும் பிரண்ட்சா இருந்துச்சாம். ஒருநாள், ஆத்துல தண்ணி குடிக்கப் போன குரங்கு, ஆத்துக்குள்ள விழுந்துருச்சாம். அதுக்கு,
நீச்சல் தெரியாதாம். மரத்து மேலே இருந்த குருவிகிட்ட, 'என்னக் காப்பாத்து... காப்பாத்துன்னு...' சத்தம் போட்டுச்சாம். உடனே, மரத்துலர்ந்து ஒரு இலையை பிய்ச்சு, தண்ணியில போட்டுச்சாம் குருவி; குரங்கு, இலையில ஏறி, கரைக்கு வந்துருச்சாம்...'' என்றபடியே சமர்த்தாக சாப்பிட்டு முடித்தாள்.
ஒரிஜினல் கதையில் இருந்த எறும்பை, குரங்காக்கி சொன்னாள். பின், ஒவ்வொரு முறையும், அவளை சாப்பிட வைப்பதற்கு, அவளை கதை சொல்லச் சொன்னான். அவளும், எதை எதையோ கலந்து, புதிய புதிய கதைகளாக சொன்னாள். அவளின் கற்பனைத் திறன், அவனை வியக்க வைத்தது.
மதியம் சாப்பிட்டு முடித்து, மாடி அறையில் தூங்கினாள் சவுந்தர்யா. மகளை பற்றி விசனப்பட்டபடி, தூக்கம் வராமல், புரண்டபடி இருந்தான், நடேசன்.
ஒரு வார இதழிலிருந்து, அவனை அலைபேசியில் அழைத்த அதன் உதவி ஆசிரியர், அவன் தபாலில் அனுப்பியிருந்த சிறுகதை ஒன்று, வெளியிட தேர்வாகி இருப்பதாகவும், கதையின் பிரதியை, உடனேயே, மின் அஞ்சலில் அனுப்பி வைக்கும்படியும், அனுப்புவதற்கு முன், கதையில் மலிந்து கிடக்கும் எழுத்து பிழைகளை திருத்தி அனுப்பும்படியும் தெரிவித்தார்.
மிகவும் சந்தோஷமாக, கீழே இறங்கி வந்து, கணினியை திறந்து, கதையில் உள்ள பிழைகளை திருத்தினான். அப்போது, அழைப்பு மணி ஒலிக்கவே, எழுந்து கதவைத்திறக்க, வாசலில் தெருவாசிகள் சிலர், நின்றிருந்தனர்.
'போன மாசம், நம்ம அசோசியேஷன்லருந்து தெருப் பிரச்னைகள் சம்பந்தமா மனு குடுத்திருந்தோம்லே... அது சம்பந்தமா பேசுறதுக்காக, நகராட்சித் தலைவர், வார்டு மெம்பர் ஆபீசுக்கு வந்துருக்காரு. மனுவை, நீங்க தான எழுதிக் குடுத்தீங்க; வந்து பேசுங்க...' என்று அழைத்தனர்.
''குழந்தை தூங்கிட்டு இருக்கு; அவள விட்டுட்டு எப்படி வர்றது...'' என்று தயங்கிய போது, 'நீங்க வாங்க; உடனே வந்துடலாம்...'என்று, வம்படியாய் அழைத்து சென்றனர். ஆனால், வீட்டிற்கு திரும்ப நேரமாகி விட்டது.
மகள் தனியே என்ன செய்கிறாளோ என பதறத்துடன் வந்தான் நடேசன். சவுந்தர்யா, கணினியில் உட்கார்ந்து, என்னவோ செய்தபடி இருந்தாள். அவள் என்ன செய்தாளோ, நடேசனின் கதை இருந்த கோப்பு, முற்றிலும் அழிந்து போயிருக்க, கடும் கோபத்துடன் மகளை ஓங்கி அறைந்து விட்டான்.
அவளும், வழக்கமாய் உளறுவது போல, புரியாத வார்த்தைகளை பேசி, தாறுமாறாய் குதித்தாள். அப்புறம், மறுபடியும் மாடியில் போய் படுத்துக் கொண்டாள். நடேசனுக்கு கணினி பற்றி அதிகம் தெரியாது. கதையை எப்படி திரும்ப பெறுவது என்று, யோசிக்க துவங்கினார்.
அவரின் நண்பர் ஒருவருக்கு, கணினியில் கொஞ்சம் நிபுணத்துவம் இருக்கிறது. அவர் தான், நடேசனுக்கு, தமிழில் எழுதுவதற்கான மென்பொருளை, அவருடைய கணினியில் பொருத்தி, எப்படி எழுதுவது என்றும், சொல்லிக் கொடுத்திருந்தார்.
அவருடன் அலைபேசியில் பேசியபோது, ''பைல் எங்கும் போயிருக்காது; ரீசைக்கிளில் போய்ப் பாருங்கள். அங்கு தான் பத்திரமாக இருக்கும்,'' என்றவர், அதை திரும்ப வரவழைப்பதற்கான வழிமுறைகளையும், சொல்லிக் கொடுத்தார்.
கதையை செப்பனிட்டு, வார இதழுக்கு அனுப்பிய பின் தான், நடேசனுக்கு கோபம் குறைந்தது. சவுந்தர்யா, கணினியில் அப்படி என்ன தான் செய்தாள் என்று பார்த்த போது, அவள் பெயரில், ஒரு கோப்பே இருந்தது.
'சவுந்தர்யாவிற்கு, மீனாட்சி, கணினியை உபயோகிக்க கற்றுக் கொடுத்து, அவள் பெயரில், கோப்பும் உருவாக்கி கொடுத்திருக்க வேண்டும்...' என்று நினைத்தபடி, கோப்பை திறந்து பார்த்தான், நடேசன்.
அதில், விதவிதமான ஓவியங்களும், வித்தியாசமான வடிவங்களும், அதற்குள், மயில், யானை மாதிரியான உருவங்களும், அபூர்வமான வண்ணங்களுமாய், ஆச்சர்யமூட்டின. கணினியில், இப்படியெல்லாம் செய்ய முடியும் என்பதை இதுவரை, நடேசன் அறிந்திருக்கவில்லை.
அவள் உருவாக்கியிருந்த கோப்பை, அப்படியே நண்பருக்கு அனுப்பி வைத்து, ''இதெல்லாம் என்ன... ஏதாவது புரிகிறதா?'' என்று கேட்டான்.
நண்பர், உடனேயே, அலைபேசியில் அழைத்து, ''எல்லாமே அற்புதமான டிசைன்கள். இவற்றை எல்லாம் உருவாக்குவதற்கு, நிறைய கற்பனை திறன் வேண்டும்; நீயா உருவாக்கினாய்?'' என்று கேட்டார்.
''இல்ல... என் மகள் சவுந்தர்யா,'' என்று, நடேசன் சொல்லவும், அவர் ஆச்சர்யப்பட்டு போனார்.
''சவுந்தர்யாவிடம், விசேஷமான திறமை இருக்கு; அதை ஊக்குவித்தால், அவள், பெரிய அளவிற்கு, 'ஷைன்' ஆவாள். டெக்ஸ்டைல்சில் அல்லது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாதிரியான நிறுவனங்களில், இப்படிப்பட்ட டிசைன்களுக்கு பெரிய மதிப்பிருக்கிறது,'' என்று சொல்லவும், நடேசனுக்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது.
சவுந்தர்யாவை தேடி, மாடிக்குப் போனான். அவள், 'லேண்ட் லைன்' போனில், தன் அம்மாவிடம், ''அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா... அப்பா, என்னை நல்லா தான் பாத்துக்கிறார்,'' என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு கண்கள் பொங்கி, அழுகை வெடித்து விட்டது.

Thanks : Dinamalar

சோ.சுப்புராஜ்

படிப்பு: பி.இ., சொந்த ஊர்: சென்னை. கட்டடப் பொறியாளர். 30 ஆண்டுகளாக எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கல்லூரியில் படிக்கும் காலத்தில், கணையாழி இதழில், முதல் சிறுகதையும், தீபம் இதழில், இவரது முதல் கவிதையும், வெளியாகியுள்ளது. இதுவரை, 70க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் 20 கவிதைகள் பல்வேறு தமிழ் வார, மாத இதழ்களில் வெளியாகியுள்ளன. சிறுகதை தொகுப்பு ஒன்றும் வெளிவந்துள்ளது. பல்வேறு இதழ்கள் நடத்திய போட்டிகளில், இவரது படைப்புகள், பரிசுகள் பெற்றுள்ளன.

Comments

Popular posts from this blog

தழும்பு!

சொந்த பந்தம்

அன்பு